தமிழ்த்தாய் வாழ்த்து – முழு பாடல் | Tamil Thai Valthu Lyrics
தமிழ்த்தாய் வாழ்த்து
- தமிழ்த்தாய் வாழ்த்து (Tamil Thai Valthu) என்பது இந்திய மாநில அரசுகளுள் தமிழை ஆட்சி மொழியாய் கொண்டுள்ளவற்றில் பாடப்பெறும் வாழ்த்துப் பாடலாகும்.
Tamil Thai Vazhthu Lyrics Manonmaniam Sundaram Pillai
- இது தமிழ்த் தாயை வாழ்த்தி வணக்கம் செலுத்துவதாக அமையும். இப்பாடல் அரசு விழாக்கள், பள்ளிகளின் காலை இறைவணக்கக் கூட்டம் முதலான நிகழ்வுகளின் தொடக்கத்தில் பாடப்படுகிறது. இந்திய தேசிய கீதம் இறுதியில் பாடப்படும்.
- தமிழக அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை எழுதியவர் மனோன்மணீயம் பெ. சுந்தரனார் என்பவராவார்.
- இவர் 1891-இல் எழுதி வெளியிட்ட புகழ்பெற்ற நாடக நூலான மனோன்மணீயம் நூலில் உள்ள பாயிரத்தில் தமிழ்த் தெய்வ வணக்கம் எனும் தலைப்பிலுள்ள ஒரு பகுதி இப்பாடலாகும்
தமிழ்த்தாய் வாழ்த்து வரலாறு
- தமிழகத்தின் அனைத்து விழாக்களிலும் மனோன்மணீயம் சுந்தனாரின் நீராரும் கடலுடுத்த பாடலைப் பாட வேண்டும் என்ற கோரிக்கை 1913-ஆம் ஆண்டு கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் ஆண்டறிக்கையில் இடம்பெற்றது.
- 1967 சென்னை மாநில சட்டமன்றத் தேர்தலில், தி.மு.க வெற்றிபெற்று ஆட்சியமைத்தது.
- தமிழ்நாட்டின் முதலமைச்சரான கா. ந. அண்ணாதுரை தமிழ் மொழியின் வளர்ச்சிப்போக்கை முன்னெடுக்கும் விதமாகத் தமிழ்நாட்டின் பள்ளி, கல்லூரி விழாக்களில் பாட ஏதுவாகத் தமிழ்த்தாய் வாழ்த்தைத் தேர்ந்தெடுக்க ஆலோசனை செய்தார்.
- நீராரும் கடலுடுத்த பாடலில் வரும் தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும் வரிகளில் வரும் திராவிட என்ற சொல் அண்ணாதுரையை ஈர்த்தது. எனவே அப்பாடலையே அரசுபூர்வமாகத் தேர்ந்தெடுத்து அறிவிக்கவிருந்த நிலையில் 1969-இல் அண்ணா இறந்தார்.
- இதன்பிறகு மு. கருணாநிதி முதலமைச்சராகத் பொறுப்பேற்றதையடுத்து, ஆரியம் போலத் தமிழ் உலகவழக்கழிந்து சிதையவில்லை என்று கூறும் வரிகள் தள்ளப்பட்டு தமிழ்த்தாயைப் புகழும் வகையில் அமைந்த வரிகள் மட்டும் ஏற்று இப்பாடலை 1970 மார்ச் 11 அன்று தமிழக அரசு தமிழ்த்தாய் வாழ்த்தாக அறிவித்தது.
- 2021-ஆம் ஆண்டு திசம்பர் 17-தேதி அன்று மு. க. ஸ்டாலின் தலைமையின் கீழ் செயற்பட்ட தமிழக அரசு தமிழ்நாடு அரசின் மாநிலப் பாடலாகத் தமிழ்த்தாய் வாழ்த்தை அறிவித்தது.
- 2021 திசம்பரில் வெளியிட்ட தமிழ்நாடு அரசாணையில் நீராரும் கடலுடுத்த பாடலைத் தமிழ்நாட்டின் அனைத்துக் கல்வி நிலையங்களிலும், பொதுத்துறை நிறுவனங்களிலும் விழா நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் கட்டாயம் பாடவேண்டும்.
- பாடலைப் பாடும்போது அனைவரும் கட்டாயம் எழுந்து நிற்க வேண்டும் (மாற்றுத் திறனாளிகளுக்கு விலக்கு) இப்பாடலை 55 விநாடிகளில் முல்லைப்பாணி எனும் பண்ணில் (மோகனராகம்) மூன்றன் நடையில் (திசுரம்) பாடவேண்டும் என்று குறிப்பிடப்பட்டது
தமிழ்த்தாய் வாழ்த்து பாடல்
தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் வரிகள்:
நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே!
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!
தமிழணங்கே!
உன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே!
வாழ்த்துதுமே!
வாழ்த்துதுமே!
தமிழ்த்தாய் வாழ்த்து பாடலின் பொருள் விளக்கம்
- நீர் நிறைந்த கடலெனும் ஆடையுடுத்திய நிலமெனும் பெண்ணுக்கு, அழகு மிளிரும் சிறப்பு நிறைந்த முகமாகத் திகழ்கிற இந்தியக் கண்டத்தில், தென்னாடும் அதில் சிறந்த தமிழர்களின் நல்ல திருநாடும், பொருத்தமான பிறைபோன்ற நெற்றியாகவும், அதிலிட்ட மணம் வீசும் திலகமாகவும் இருக்கின்றன.
- அந்தத் திலகத்தில் இருந்து வரும் வாசனைபோல, அனைத்துலகமும் இன்பம்பெறும் வகையில் எல்லாத்திசையிலும் புகழ் மணக்கும்படி இருக்கின்ற பெருமை மிக்க தமிழ்ப்பெண்ணே! தமிழ்ப்பெண்ணே!
- இன்றும் இளமையாக இருக்கின்ற உன் சிறப்பானத் திறமையை வியந்து எங்கள் செயல்களை மறந்து உன்னை வாழ்த்துவோமே! வாழ்த்துவோமே! வாழ்த்துவோமே!
மெய்ப்பாடல்
நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே!
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!
பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்
ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்
சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே!
தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் lyrics
- இப்பாடல் முல்லைப்பாணி எனும் பண்ணில் அமைந்துள்ளது. மூன்றன் நடை தாளத்தில் அமைந்துள்ளது.
- முல்லைப்பாணி, முல்லத்தீம்பாணி, முல்லையந்தீங்குழல் (முல்லை அம் தீம் குழல்), சிறுமுல்லை, சாதாரி, தாரப்பண், காந்தாரப் பண், ஆசான், ஆசான் திறம் என பல்வேறு பெயர்கள் கொண்டுள்ளது.
- தமிழிசையின் முதல் பெரும்பண் செம்பாலை எனும் முல்லைப்பண் (அரிகாம்போதி / MixoLydian). இந்த முல்லைப்பண்ணின் திறப்பண் தான் சிறுமுல்லை(மோகனம் / Major Pentatonic).
- எனவே இது தமிழிசையின் முதல் சிறுபண். முல்லைப்பண், சிறுமுல்லை இரண்டு பண்களையும் தமிழர்கள் மிக உயர்வான இடத்தில் வைத்துக் கொண்டாடினர் எனும் உண்மையை நாம் தமிழ் இலக்கியங்களில் காணலாம்.
நன்றி…